நெஞ்செரிச்சல், அஜீரணம்- தீர்வு என்ன..??
"நாம் சாப்பிடும் உணவைக் கூழாக்கி, திரவ உணவாக மாற்றி, உணவுக்குழாயின் ரத்தக்குழாய்கள் மூலம் உறிஞ்ச, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும். அதன் மூலமே ஜீரணமாதல் நடக்கிறது.
நேரம் தவறிச் சாப்பிடுவது, அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது, அதிக காரம், எண்ணெய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவது, வலி நிவாரணிகளை அதிகம் எடுத்துக் கொள்வது போன்றவற்றால் அதிகமாக அமிலம் சுரந்து வலி வரலாம். சிலருக்கு இந்தக் காரணங்கள் அன்றி மன அழுத்தம் காரணமாகவும் இந்தப் பிரச்சினைகள் வரலாம்.
அதிக அளவில் அமிலம் சுரப்பதால் நெஞ்சு கரித்தலோடு நடு நெஞ்சில் வலி, இரைப்பையிலும் மேல் வயிற்றிலும் வலி வரலாம். அமிலத்தன்மை அதிகரித்தால் அது இரைப்பையின் சுவர்களை அரித்துப் புண்ணாக்கும்.
ஹைப்பர் அசிடிட்டி எனப்படும் இந்தப் பிரச்சினைக்கு ஆன்டாசிடு மருந்துகள் உதவும். இவை இரைப்பையின் அமிலத்தன்மையைச் சமன்படுத்தும். ஆனால், அமிலத் தன்மையைச் சமன்படுத்தும் இந்த மருந்துகளில் அலுமினியம், மெக்னீசியம் போன்ற காரத்தன்மையுள்ள உலோகங்களே பிரதானமாக இருக்கும்.
எனவே இவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்று உபாதைகள் வரலாம். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் அதிகமுள்ளோர் போன்றோர் இவற்றை மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளவே கூடாது.
தவிர நெஞ்செரிச்சல், நடு நெஞ்சில் வலி போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகளாக மட்டும்தான் இருக்க வேண்டியதில்லை. மாரடைப்பின் அறிகுறிகளாகவும் இருக்கக்கூடும். எனவே சுய மருத்துவத்தைத் தவிர்த்து முறையான மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.
சரியான நேரத்தில் முறையான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்து, மன அழுத்தம் தவிர்த்து வாழுங்கள்"
செய்ய வேண்டியவை:
- குறைந்த அளவு உணவை நன்றாக மென்று விழுங்கவும்.
- நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடவும்.
- உடல் எடையைக் குறைக்கவும்.
- அதிகம் பால் அருந்துவது நல்லது.
செய்யக் கூடாதவை:
- நேரம் தவறிச் சாப்பிடுவது.
- சாப்பிட்டவுடன் புகை பிடித்தல், காபி, டீ சாப்பிடுவது.
- உணவுக்குப் பின்னர் மிட்டாய்களைச் சாப்பிடுவது.
- சாப்பிட்ட உடனே தூங்க செல்வது.
- இறுக்கமான உடைகளை அணிவது.
- மருத்துவரைப் பார்க்கத் தயங்குவது.
0 Comments