தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா(DELTA PLUS CORONA)-சுகாதாரத்துறை செயலாளர் ..!!
தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "ஏற்கனவே மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்ட நிலையில் நாடு முழுவதும் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மே மாதத்தின் தொடக்கத்தில் தமிழகத்தில் 8 பிரிவுகளில் மக்களை வகைப்படுத்தி சுமார் 1000பேரின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மே மாதம் அனுப்பப்பட்ட மாதிரிகளின் முதற்கட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் பரிசோதனை கொடுத்த இடம் சென்னை என்பதால் அவர் சென்னையை சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர், வேறு யாருக்கேனும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை வேகமாக கண்டறியும் பணிகளை தொடங்கி இருக்கிறோம். முதற்கட்டமாக ஆயிரம் நபர்களுக்கு மரபியல் ரீதியாக டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் குழந்தைகள் என வெவ்வேறு 8 பிரிவுகளில் மரபியல் ரீதியாக மாதிரிகளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி இருக்கிறோம். தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறிய பட்டிருப்பதால் மக்கள் பதட்டமடைய வேண்டாம். அதே நேரத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தினார்.
0 Comments