Join Our Whats app Group Click Below Image

விவேக் தேடி கிடைக்காத அந்தப் புகைப்படம்; கிடைத்தது அவர் மறைந்தபிறகு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 விவேக் தேடி கிடைக்காத அந்தப் புகைப்படம்; கிடைத்தது அவர் மறைந்தபிறகு..!!

இந்தப் புகைப்படத்தைத்தான் மறைந்த நடிகர் விவேக் தேடிக் கொண்டேயிருந்தார். இது அவர் அஞ்சல் துறையில் மூன்று மாதங்கள் தொலைபேசி ஆபரேட்டர் பயிற்சி முடித்த போது எடுத்தப் புகைப்படம்.

மதுரை தல்லாக்குளத்தில், 1983-ஆம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 38 ஆண்டுகளாக விவேக் தேடிக் கொண்டிருந்த இந்த புகைப்படம் கடைசி வரை அவர் கண்களில் படவேயில்லை. இறுதியாக, தான் சேமித்து வைத்தப் புகைப்படக் குவியலில் இருந்து தேடி எடுத்து இன்று காலை அதனைப் பகிர்ந்தார் அவருடன் படித்த ஒரு தோழர். அது பிஎஸ்என்எல் ஊழியர்கள் மூலம் சமூக வலைத்தளத்திலும் பரவியது.

சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு நண்பர் மூலமாகப் பெற்று மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் (60) இந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தன்னை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த போதும் கூட விவேக் தன்னிடம் இந்தப் புகைப்படம் பற்றி கேட்டதையும் அவர் நினைவு கூருகிறார்.

இது பற்றி ஜென்ராம் பேசுகையில், விவேகானந்தனும் நானும் உள்பட 29 பேர் இந்த பயிற்சியை எடுத்துக் கொண்டோம். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி மதுரை தல்லாகுளம் தொலைபேசி இணைப்பகத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது, விவேக் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மதுரையில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார்.  ஜென்ராம் ஒரு வாடகை அறையில் செல்லூரில் தங்கியிருந்தார்.

அந்த நாள்களில், வார இறுதி நாள்களில் தனது ஹார்மோனியத்துடன் வந்துவிடுவார். கிளாசிகல் முதல் பாப் பாடல்கள் வரை வாசித்துப் பாடுவார் என்று தனது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜென்ராம்.

"எங்களுக்கு பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இசையால் நாங்கள் இணைந்தோம். பயிற்சியின் போதே, அவர் பலதிறன் கொண்ட நபராகத் திகழ்ந்தார். ஆனால், அப்போது எங்களுக்குத் தெரியாது, அவர் ஒரு நடிகராக விரும்பினார் என்று"

பயிற்சி முடித்த பிறகு விவேக் மதுரை மற்றும் திண்டுக்கல்லிலும், நான் தூத்துக்குடியிலும் பணியமர்த்தப்பட்டேன்.

பிறகு எங்களது வாழ்க்கைப் பயணம் வேறு வேறு பாதையில் பயணித்தது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் நடிகராகியிருந்தார். நான் ஊடகப் பணியில் இருந்தேன். 2007 - 08-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவரை சந்தித்தேன். அந்த நிகழ்ச்சியில் அவரைப் பார்த்ததும், அவருக்கு என்னை நினைவிருக்குமா என்று நினைத்தேன். ஆனால் என்னை அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், பயிற்சி காலத்தில் என்னுடனான அனைத்து நிகழ்வுகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அது மட்டுமல்ல, அந்த பயிற்சியின் நிறைவில் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் என்னிடம் இருக்கிறதா என்று மிகவும் ஆவலோடு கேட்டார். ஆனால் அது என்னிடம் இல்லை. மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு அவரை அந்த ஒரே ஒரு தருணத்தில் மட்டுமே நான் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன் என்கிறார் ஜென்ராம்.

ஆனால், குறுந்தகவல்கள் மூலம் தொடர்பில்தான் இருந்தோம். நடந்துச் செல்லும் தொலைவில்தான் அவரது வீடு இருந்தது. ஆனால், ஒரு முறை சந்திக்கலாம் என்ற வார்த்தை ஒரு நாளும் எனக்கு தீவிரமாக ஏற்படவில்லை. ஆனால் இனி அந்த வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று நான் நினைக்கவேயில்லை.

அந்தப் புகைப்படம், விவேக் வெகு நாள்களாகப் பார்க்க ஆசைப்பட்ட அந்த ஒற்றைப் புகைப்படம், இன்று உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ஒரு நபர் மட்டும் பார்க்காமலேயே மறைந்துவிட்டார்.

நான் நினைக்கவேயில்லை, அந்தப் புகைப்படத்தைப் பார்க்காமலேயே விவேக் சென்றுவிடுவார் என்று. இன்று காலை அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் கண்ணீர் வழிந்தது. அந்த பழைய நினைவுகளுக்குச் சென்றுவிட்டேன், அப்போதுதான், விவேக் என்னிடம் இந்தப் புகைப்படத்தைக் கேட்டதும் எனக்கு நினைவில் வந்தது என்கிறார் ஜென்ராம்.

Post a Comment

0 Comments