பெங்களூருவில் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்-கர்நாடக மாநில அரசு.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, பெங்களூரு நகரத்திற்குள் நுழைவதற்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.17 கோடியாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சில குறிப்பிட்ட நகரங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில், புதியதாக உள்நுழையும் நபர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் தற்போது வரை 9.75 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9.46 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 16,905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. மேலும், அரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 நபர்களுக்கு மேல் பங்கேற்கவும், திறந்தவெளி நிகழ்வுகளில் 500 நபர்களுக்கு மேல் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மக்கள் புழக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் விவரங்களும் இணையத்தில் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உருமாறிய கொரோனா தொற்று குறித்தும் எச்சரித்துள்ளார். அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கவனமுடன் இருக்குமாறும், இதுவரை 20 பேர் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இன்று மட்டும் 1,400 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் தொற்றால் 12,461 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments