விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தும் பெண்கள்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், 'டைம்' இதழின் அட்டைப் படம் அச்சிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், விவசாயிகள் நடத்தும் போராட்டம், 100 நாட்களை கடந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் டைம் இதழ், விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்று உள்ள பெண்களை கவுரவப்படுத்தி உள்ளது. நாளை மறுநாள், சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு வெளியிடப்படும், டைம் இதழின் அட்டைப் பக்கத்தில், டில்லி எல்லையில், விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தும் பெண்களின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
'இந்திய விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில், முன்னணியில் உள்ள பெண்கள்:
அந்த படத்தின் கீழ், 'இந்திய விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில், முன்னணியில் உள்ள பெண்கள்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.இது தொடர்பான கட்டுரைக்கு, 'என்னை யாரும் மிரட்ட முடியாது. என்னை யாராலும் விலைக்கு வாங்க முடியாது' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 'போராட்டத்தில் பெண்கள் பங்கேற்க வேண்டாம்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியும், அதை பொருட்படுத்தாமல், பெண்கள் போராட்டக் களத்தில் முகாமிட்டுள்ளது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments