தமிழை நிதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு.
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரிய மனுவில், மாநில தமிழ் மற்றும் கலாச்சாரத்துறை தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், திருச்சியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், 2007ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டதாகவும், இதனை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 13 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழை வழக்காடு மொழியாக நீதிமன்றங்களில் அறிவிப்பதற்கு தேவையான தமிழ் நூலக வசதி, தமிழ் மொழியில் சட்டப் புத்தகங்கள், சுருக்கெழுத்து, தமிழ் சார்ந்த மென்பொருள் ஆகியவை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மாநில தமிழ் மற்றும் கலாச்சாரத்துறை தலைமைச் செயலர், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
0 Comments